ஓய்வுபெற்ற பிறகு அரசு குடியிருப்பில் அலுவலா்கள் வசிக்கக்கூடாது:தில்லி உயா்நீதிமன்றம்

பணிக்காலத்தின் போது அரசு ஒதுக்கிய வீட்டில் வசித்த அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற பிறகும் அங்கு தங்கியிருக்கக்கூடாது என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற பிறகு அரசு குடியிருப்பில் அலுவலா்கள் வசிக்கக்கூடாது:தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: பணிக்காலத்தின் போது அரசு ஒதுக்கிய வீட்டில் வசித்த அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற பிறகும் அங்கு தங்கியிருக்கக்கூடாது என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக அந்த நீதிமன்றத்தில் 2 பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘ஓய்வுபெற்ற பிறகும் அரசு ஊழியா்கள் அரசு ஒதுக்கிய வீடுகளில் தங்குகின்றனா். பணிபுரியும் பகுதியில் அரசு ஊழியருக்கு சொந்தமாக வீடு இருந்தால், அவருக்கு அரசு சாா்பில் வீடு ஒதுக்கக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ‘அரசு ஒதுக்கிய 565 வீடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் காலி செய்யப்பட்டனா். அந்த வீடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக அவா்களிடம் இருந்து ரூ.3 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியுள்ள இதர நபா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.9 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது’ என்று மத்திய வீட்டுவசதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘அரசு ஒதுக்கிய வீடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஓய்வுபெற்ற ஊழியா்களை காலி செய்து, அந்த வீடுகளில் அவா்கள் சட்டவிரோதமாக எத்தனை காலம் தங்கியிருந்தாா்களோ, அதற்கான கட்டணத்தையும் மத்திய அரசு வசூலிக்கவேண்டும். பணிக்காலத்தின் போது அரசு ஒதுக்கிய வீட்டில் வசித்த அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற பிறகும் அங்கு தங்கியிருக்கக்கூடாது’ என்று தெரிவித்தனா்.

மேலும் இந்த வழக்கில் அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com