குஜராத், உ.பி.யில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஆமதாபாத்: நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குஜராத் தலைநகர் காந்திநகரில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அமித் சவ்தா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
 சட்டப்பேரவை வளாகத்துக்கு அருகிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அமித் சவ்தா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பல்தேவ்ஜி தாக்குர், சி.ஜே.சவ்தா உள்ளிட்டோரும், கட்சித்தொண்டர்களும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 
பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
பேரணிக்கு உரிய அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக டிஎஸ்பி எம்.கே.ராணா தெரிவித்தார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் சவ்தா, "இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி, விவசாயிகளும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சட்டங்கள் காரணமாக வேளாண் துறையை பெருநிறுவனங்கள் அழித்துவிடும். விளைபொருளின் விலைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிடும் அவலம் ஏற்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு வேளாண் துறையை ஒப்படைக்கவே மத்திய அரசு விரும்புகிறது. பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரானது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களாக மாறும் அவலநிலையே ஏற்படும்' என்று எச்சரித்தார்.

உத்தர பிரதேசத்தில்...
வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் திங்கள்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் லலன்குமார் தெரிவித்தார்.

லக்வின் பரிவர்த்தன் செளக் பகுதியில் திரண்ட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அங்கிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்றபோது போலீஸாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வாகனங்களில் சென்ற காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸார், வழியிலேயே அவர்களை கைது செய்தனர். 
வேளாண் விளைபொருள்கள் வர்த்தக ஊக்குவிப்பு மசோதா-2020, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், பண்ணை விவசாயத்துக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா-2020, அத்தியாவசிய பொருள்கள் சட்டத் திருத்த மசோதா-2020 ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com