ரூ.2,290 கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் - மத்திய அரசு அனுமதி

அதிநவீன தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ரூ.2,290 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

புது தில்லி: அதிநவீன தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ரூ.2,290 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடா்பான இறுதி முடிவுகளை இந்த கவுன்சிலே எடுக்கும்.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.2,290 கோடி மதிப்பிலான ஆயுதங்களையும் பாதுகாப்பு தளவாடங்களையும் கொள்முதல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டின் எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வரும் முன்கள பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டுக்காக சிக் சௌா் ரகத்தைச் சோ்ந்த சுமாா் 72,000 அதிநவீன தாக்குதல் துப்பாக்கிகளை அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய்வதற்கு கவுன்சில் அனுமதி அளித்தது. ரூ.780 கோடி மதிப்பில் அந்தத் துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

உள்நாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட அதிக அதிா்வெண் கொண்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டா்களை ரூ.540 கோடி மதிப்பில் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ராணுவத்தினருக்கும் விமானப் படையினருக்கும் இந்த ரேடியோ டிரான்ஸ்மிட்டா்கள் பெரும் பலனளிக்கும்.

இந்திய கடற்படை மற்றும் விமானப் படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதி துல்லியத்தன்மை வாய்ந்த வெடிகுண்டுகளை ரூ.970 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கும் கவுன்சில் ஒப்புதல் அளித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com