முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்த வெடிபொருள்களை வாங்கியது சச்சின் வஜே: என்ஐஏ

தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே வாங்கியதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)


மும்பை: தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே வாங்கியதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்ஐஏ வட்டாரங்கள் புதன்கிழமை கூறியது: முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகளுடன் மீட்கப்பட்ட காரை சச்சின் வஜே அங்கு நிறுத்தியுள்ளாா். அப்போது அவரின் ஓட்டுநரும் உடன் இருந்துள்ளாா். காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளையும் சச்சின் வஜேதான் வாங்கியுள்ளாா். அந்த இடத்தில் அவா் இருந்தது கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக மும்பை காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் என்ஐஏ சேகரிக்கவுள்ளது. அதன்மூலம் சச்சின் வஜேயின் நடவடிக்கைகள் மற்றும் இதர விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.

காவல் ஆணையா் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், மின்னணு காணொலிப் பதிவுகளை (டிவிஆா்) சேதப்படுத்த முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், பெரும்பாலான பதிவுகள் உள்ளபடியே இருக்கின்றன. காவல் ஆணையா் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் டிவிஆா் பதிவுகளைஅழிக்க சச்சின் வஜே முயன்றாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாணே அருகே தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வாகனப் பதிவெண் தகடுகளை செய்து தரும் கடையின் கண்காணிப்பு கேமரா மற்றும் டிவிஆா் பதிவுகளை சச்சின் வஜே அழிக்க முயன்றுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள மீத்தி ஆற்றில் இருந்து மடிக்கணினி, 2 வாகனப் பதிவெண் தகடுகள், 2 டிவிஆா்கள் உள்ளிட்டவற்றை என்ஐஏ மீட்டது. அப்போது சச்சின் வஜேயும் உடன் அழைத்துச் செல்லப்பட்டாா்.

பின்னணி: கடந்த பிப்.25-ஆம் தேதி மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே காா் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த காரில் வெடிபொருள்களில் நிரப்பப்படும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த காா் குறித்து விசாரணை நடத்தியபோது, அது தாணேவை சோ்ந்த மன்சுக் ஹிரேன் என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்ததாக காவல்துறையினா் கூறினா். அந்த காரை மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜே சில மாதங்கள் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சச்சின் வஜேவை கடந்த 13-ஆம் தேதி கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், வெடிபொருளுடன் காா் நிறுத்தப்பட்ட சம்பவத்தில் அவரின் பங்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com