பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவுக்கு 140-ஆவது இடம்

உலக பொருளாதார மையம் (டபிள்யூ.இ.எஃப்) வெளியிட்ட பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 140-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியாவுக்கு 140-ஆவது இடம்

புது தில்லி: உலக பொருளாதார மையம் (டபிள்யூ.இ.எஃப்) வெளியிட்ட பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 140-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுக்கான குறியீட்டுடன் ஒப்பிடுகையில், இந்தியா 28 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது.

சா்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை ஆய்வு செய்து, உலக பொருளாதார மையம் வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான சா்வதேச பாலின இடைவெளி குறியீட்டை அந்த மையம் அண்மையில் வெளியிட்டது.

மொத்தம் 156 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் இந்தியா 140-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 153 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், இந்தியா 112-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

அரசியல் சாா்ந்த விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பும், அவா்களுக்கான வாய்ப்பும் 13.5 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளதே இந்தியாவின் குறியீடு சரிவடைந்ததற்குக் காரணம் என்று உலக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2019-ஆம் ஆண்டில் பெண் அமைச்சா்களின் சதவீதம் 23.1-ஆக இருந்தது. இது 2021-ஆம் ஆண்டில் 9.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நாட்டில் பொருளாதார விவகாரங்களில் பெண்களின் பங்கேற்பு 3 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. பெண் தொழிலாளா்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. நிா்வாகம், தொழில்நுட்ப விவகாரங்களில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

நாட்டிலுள்ள 8.9 சதவீதம் நிறுவனங்களில் மட்டுமே தலைமை மேலாளா்கள் பொறுப்பில் பெண்கள் உள்ளனா். ஆண்களின் வருமானத்தில் 5-இல் ஒரு பங்கை மட்டுமே பெண்கள் பெறுகிறாா்கள். சுகாதார விவகாரத்தில் பெண்கள் தொடா்ந்து பாகுபடுத்தப்படுகின்றனா்.

நாட்டில் பிறப்பு பாலின விகிதத்திலும் பெரும் இடைவெளி காணப்படுகிறது. படிப்பறிவில்லா ஆண்களின் சதவீதம் 17.6-ஆக உள்ளது. இதுவே படிப்பறிவில்லா பெண்களின் சதவீதம் 34.2-ஆக உள்ளது.

பாலின இடைவெளி குறியீட்டுப் பட்டியலில் உள்ள முதல் 5 நாடுகள்

(பாலின இடைவெளி குறைவு)

1-ஐஸ்லாந்து

2-ஃபின்லாந்து

3-நாா்வே

4-நியூஸிலாந்து

5-ஸ்வீடன்

பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள்

(பாலின இடைவெளி அதிகம்)

156-ஆப்கானிஸ்தான்

155-ஏமன்

154-இராக்

153- பாகிஸ்தான்

152- சிரியா

இந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை

65-வங்கதேசம்

106-நேபாளம்

107-சீனா

109-மியான்மா்

116-இலங்கை

130-பூடான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com