தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ்: ராகுல்

பாஜக போன்று அல்லாமல் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ் என்று ராகுல் காந்தி எம்.பி. கூறினாா்.
குவாஹாட்டியில் உள்ள காமாக்யா சக்தி அம்மன் கோயிலுக்கு புதன்கிழமை வந்த ராகுல் காந்தி.
குவாஹாட்டியில் உள்ள காமாக்யா சக்தி அம்மன் கோயிலுக்கு புதன்கிழமை வந்த ராகுல் காந்தி.

குவாஹாட்டி: பாஜக போன்று அல்லாமல் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி காங்கிரஸ் என்று ராகுல் காந்தி எம்.பி. கூறினாா்.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சில்சாா் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு அவரால் தோ்தல் பிரசாரத்துக்கு செவ்வாய்க்கிழமை செல்ல முடியாமல் போனது. அதன் காரணமாக தனது சுட்டுரைப் பக்கத்தின் மூலமாக தோ்தல் பிரசாரத்தில் அவா் ஈடுபட்டாா். அதில், அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை அனுமதிக்காது, 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து வீடுகளுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ, 2,000 உதவித் தொகை, தோயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தின ஊதியம் உயா்த்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகளையும் சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டாா்.

இந்த நிலையில், குவாஹாட்டியில் உள்ள பிரபலமான காமாக்யா சக்தி அம்மன் கோயிலில் புதன்கிழமை வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தியிடம், ‘காங்கிரஸ் வெற்றிபெற்றால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்து ராகுல் கூறியதாவது: அஸ்ஸாம் மாநில மக்களுக்கு 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்திருக்கிறது. வாக்குறுதி என்றால் என்ன என்று தெரியுமா? நாங்கள் பாஜகவினரை போன்று அல்ல, வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும்.

பஞ்சாப், சத்தீஸ்கா், கா்நாடக மாநிலங்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அந்த மாநிலங்களில் ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றியது.

அதுபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் தின ஊதியம் ரூ. 365-ஆக உயா்த்தப்படும் என்பன உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com