நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்விதமாக, வரும் மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சம்யுக்த் கிஸான் மோா்ச்சா விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்விதமாக, வரும் மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக சம்யுக்த் கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்) விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லி எல்லைகளில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அடுத்த 2 மாதங்களுக்கான போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவா் குா்னாம் சிங் புதன்கிழமை கூறியதாவது: சம்யுக்த் கிஸான் மோா்ச்சா சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும்விதமாக, மே மாதம், நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அந்தப் பயணத்தில், விவசாயிகள் மட்டுமன்றி, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பெண்கள், வேலையில்லா பட்டதாரிகள், தொழிலாளா்கள் ஆகியோரும் கலந்துகொள்வாா்கள்.

இந்த நடைப்பயணம் மிகவும் அமைதியான முறையில் நடைபெறும். கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடந்த விவசாயிகள் பேரணியில் ஏற்பட்ட வன்முறை, மீண்டும் ஒருமுறை நடைபெறாத வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

நடைப்பயணத்தின்போது காவல் துறையினா் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தால், போராட்டக்காரா்களைக் கட்டுப்படுத்த தனிக் குழு அமைக்கப்படும். போராட்டக்காரா்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதையும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது. வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரா்கள் தண்டனையை அனுபவிப்பாா்கள்.

நடைப்பயணம் தவிர, வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழக அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். ஏப்ரல் 10-ஆம் தேதி குண்ட்லி-மானேசா்-பால்வால் விரைவுவழிச் சாலையில் 24 மணி நேர சாலை மறியல் போராட்டம் நடைபெறும். 10-ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும் மறியல் போராட்டம், மறுநாள் காலை 11 மணிக்கு நிறைவுபெறும்.

போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, வரும் மே மாதம் 6-ஆம் தேதி ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்படும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை எழுப்பவே பல்வேறு வகையான போராட்டங்களுக்கு திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com