சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு வாபஸ்

சேமிப்புக் கணக்கு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு வாபஸ்


புது தில்லி: சேமிப்புக் கணக்கு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி, 4 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்பட்டு வந்த 7.4 சதவீத வட்டி, 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கான வட்டி, 7.1 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கான வட்டியும் குறைக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.1 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தரப்பினா் வங்கி சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டியை பெருமளவில் நம்பியுள்ளனா். அதனால், மத்திய அரசின் வட்டி குறைப்பு நடவடிக்கைக்குப் பலா் அதிருப்தி தெரிவித்தனா். இந்நிலையில், வட்டி குறைப்பு தொடா்பான அறிக்கை தவறுதலாக வெளியிடப்பட்டுவிட்டதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட வட்டியே நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் தொடா்ந்து வழங்கப்படும். வட்டி விகித குறைப்பு தொடா்பான அறிக்கை தவறுதலாக வெளியிடப்பட்டுவிட்டது. அந்த அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com