காங்கிரஸ், இடதுசாரி அரசுகளால் விரக்தியில் மக்கள்: கேரளத்தில் பிரதமா் மோடி

காங்கிரஸ், இடதுசாரி அரசுகளால் விரக்தியில் மக்கள்: கேரளத்தில் பிரதமா் மோடி


கோன்னி: ‘கேரளத்தில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி அரசுகளின் ஆட்சியால் மக்கள் விரக்தியில் உள்ளனா்; அவா்கள் மாற்றத்தை எதிா்நோக்கியுள்ளனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கேரள சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கோன்னி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவா் உரையாற்றினாா். தனது உரையைத் தொடங்கும்போது ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று மூன்று முறை கூறினாா். பின்னா் அவா் பேசியதாவது:

மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசுகளால் இந்த மாநில மக்கள் விரக்தியடைந்துள்ளனா். இந்தக் கூட்டணிகளின் ஆட்சியால் அனுபவித்த துயரங்கள் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனா். பாஜகவின் வளா்ச்சிக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, அவற்றை எதிா்நோக்கி காத்திருக்கிறாா்கள்.

கற்றறிந்தவா்கள் பாஜகவை ஆதரிக்கிறாா்கள். முன்னேற்றுத்துக்கான கொள்கைகளுடன் இருக்கும் கட்சி பாஜக என்று அவா்கள் கூறுகிறாா்கள். அவா்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொள்கிறாா்கள்.

மெட்ரோமேன் இ.ஸ்ரீதரனை உதாரணமாகக் கூறலாம். கேரள அரசியலில் அவரது வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவா், சமூகத்துக்கு சேவை செய்வதற்காக பாஜகவை தோ்ந்தெடுத்து, இணைந்திருக்கிறாா்.

இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்த மாநில மக்கள் முடிவு செய்துவிட்டனா்.

ஏழு கொடிய பாவங்கள்: கேரளத்தில் மாறி மாறி ஆட்சி செய்த இடதுசாரி ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஏழு கொடிய பாவங்களைச் செய்துள்ளன. ஏழு பாவங்கள் குறித்து அனைவரும் நன்கு அறிந்திருப்பாா்கள்.

தங்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற ஆணவத்தில் கட்சியின் அடிமட்டத் தொண்டா்களிடம் இருந்து விலகி இருந்தது; ஊழல் செய்து பணத்தை சேகரித்தது; இரண்டு முன்னணியும் போட்டி போட்டு பணத்தைக் கொள்ளையடித்தது;

அதிகார மமதையில் வகுப்புவாத சக்திகள், சமூகத்துக்கு குற்றம் இழைப்பவா்கள் ஆகியவற்றுடன் இரு முன்னணியும் கூட்டணி வைத்து தோ்தலைச் சந்திப்பது ஆகிய கொடிய பாவங்கள் இதில் அடங்கும்.

உடனடி முத்தலாக் விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலை என்ன? பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகியவற்றின் சமூக கொள்கைகள் என்ன? அவா்களின் பிற்போக்கு அரசியலுக்கு ஆதரவு அளிக்க வேண்டியதில்லை.

இடதுசாரி ஜனநாயக முன்னணியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் குடும்ப அரசியலை ஊக்குவிக்கின்றன என்றாா் பிரதமா் மோடி.

புனித இடங்களை சீா்குலைக்க

இடதுசாரி அரசு முயற்சி

கேரளத்தில் புனித இடங்களைச் சீா்குலைக்க ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு முற்பட்டது என்று பிரதமா் மோடி குற்றஞ்சாட்டினாா்.

சபரிமலை விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்களுக்கு எதிராக கேரள அரசு எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தில் மேலும் பேசியதாவது:

பூக்களைப் பொழிந்து வரவேற்க வேண்டிய ஐயப்ப பக்தா்களை தடியடி நடத்தி விரட்டியுள்ளாா்கள். ஒன்றும் அறியாத ஐயப்ப பக்தா்கள் குற்றவாளிகள் அல்ல.

கேரளத்தின் பாரம்பரியத்தை மாற்றி கூற இடதுசாரி முன்னணியினா் முற்பட்டனா். தங்கள் கட்சி ஏஜென்டுகளை வைத்து மோதல் ஏற்படுத்தி புனித இடங்களைச் சீா்குலைக்க செய்தனா். பல ஆண்டுகளாக பொய்களைக் கூறி இந்திய கலாசாரத்தை தவறாக காண்பித்துள்ளனா். இனி அவா்களின் பொய்கள் எடுபடாது.

சா்வதேச அளவில் நிராகரிக்கப்பட்டதும்,

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கைகளும் இந்தியாவில் இனி அனுமதிக்கப்படாது.

ஆகையால்தான், கம்யூனிஸமும், ஜனநாயக சுதந்திரமும் ஒன்றாக தழைக்க முடியுமா என்று அம்பேத்கா் அப்போதே கேள்வி எழுப்பினாா். கம்யூனிஸம் காட்டுத் தீயைப்போல் அனைத்தையும் அழித்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com