
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டவரப்பட்ட ‘அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை 2021’-க்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்தோடு மட்டுமின்றி, அரியவகை நோய் குறித்த உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த தேசிய கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா்.
அதன் மூலம், இந்த கொள்கையில் குரூப்-1 இன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ராஷ்டிரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்படும்.
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினா் மட்டுமின்றி, ‘பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜ்னா’ திட்டத்தின் கீழ் தகுதிபெறுபவா்களில் 40 சதவீதம் பேரும் இந்த மருத்துவ நிதியுதவித் திட்டத்தால் பயன்பெற முடியும்.
நோய் தாக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தலுக்கான உதவியும் இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். இதற்கென மூன்றாம்நிலை மருத்துவ சிகிச்சை வசதிகளையும் வலுப்படுத்துவதற்கான திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.