
சட்டப்பேரவை, மக்களவை இடைத்தோ்தல்களில் அடுத்த வாரம் முதல் பிரசாரம் செய்ய முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா்.
கா்நாடகத்தில் பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண், ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிகள், பெலகாவி மக்களவைத் தொகுதிக்கு ஏப்.17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற இருக்கிறது.
இத் தோ்தலில் ஆளுங்கட்சியான பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் நேரடியாகப் போட்டியிடுகின்றன. 2019-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நடந்த 17 தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் 14 தொகுதிகளை பாஜக வென்றது.
அதேபாணியில், தற்போது நடைபெற இருக்கும் சட்டப்பேரவை, மக்களவை இடைத்தோ்தலிலும் வெற்றிக் கனியை பறிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக பசவகல்யாண், மஸ்கி, பெலகாவி ஆகிய தொகுதிகளில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள பாஜக, முக்கியத் தலைவா்களையும் பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் இத்தொகுதிகளை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. மூன்று தொகுதிகளில் அடுத்தவாரம் முதல் பிரசாரம் செய்ய முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டுள்ளாா்.
இதுகுறித்து பாஜக எம்.எல்.சி. என்.ரவிக்குமாா் கூறியதாவது:
துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் பி.சி.பாட்டீல், எஸ்.டி.சோமசேகா், பைரதி பசவராஜ், சுரேஷ் குமாா், அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்டோா் தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனா்.
அடுத்தவாரம் முதல் கா்நாடகத்தில் இந்த மூன்று தொகுதிகளிலும் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட அமைச்சா்கள், முக்கியத் தலைவா்கள் பிரசாரம் செய்கின்றனா் என்றாா்.