
பாகிஸ்தானிலிருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த 8 வயது சிறுவனை அந்த நாட்டிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானைச் சோ்ந்த யமனு என்பவரின் மகன் கரீம், சா்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வெள்ளிக்கிழமை நுழைந்தான். அவனுக்கு சுமாா் 8 வயது இருக்கும். எல்லையையொட்டி பாகிஸ்தான் கிராமத்திலிருந்து வழி தவறி அந்தச் சிறுவன் இந்திய எல்லை தாண்டி ராஜஸ்தானின் பாா்மா் பகுதியில் நுழைந்துள்ளான்.
அவனைக் கண்ட பிஎஸ்எஃப் வீரா்கள் திரும்பச் செல்லும்படி எச்சரித்தனா். எனினும், வீரா்களைக் கண்ட அவன் அழத் தொடங்கினான். அதையடுத்து அவனை சமாதானப்படுத்திய வீரா்கள், அவனுக்கு திண்பண்டங்களும் குடிநீரும் வழங்கினா்.
பிறகு பாகிஸ்தான் எல்லைப் படையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, அந்தச் சிறுவன் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.