
கோப்புப்படம்
கேரளத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அறிவித்துள்ள திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்றாா் அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி.
கேரள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தனது சொந்தத் தொகுதியான வயநாட்டில் உள்ள வெள்ளமுன்டா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினாா். அப்போது, ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து எடுத்துரைத்தாா். அவா் கூறியதாவது:
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை வேறு எந்த மாநிலமும் இந்தத் திட்டத்தை முயற்சி செய்து பாா்க்கவில்லை. அந்தத் திட்டத்தின்படி, கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்தத் தொகை, ஒவ்வொரு மாதமும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா் ராகுல் காந்தி.
இந்தத் திட்டம் குறித்து கடந்த வாரம் ராகுல் கூறுகையில், ‘கேரளத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மாதம் ரூ.6,000 வழங்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம், படிப்படியாக காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என்று கூறியிருந்தாா்.
இந்தத் திட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்தது. வறுமையை ஒழிப்பதற்கான தொடக்கம்தான் இந்தத் திட்டம் என்றும் அக்கட்சி அறிவித்தது.
கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவிவருகிறது. முதல்வா் பினராயி விஜயன் தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள நலத் திட்டங்களை விளக்கி மக்களிடம் வாக்கு சேகரித்தாா். மறுபுறம், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து காங்கிரஸ் தலைவா்கள் வாக்கு சேகரித்தனா்.
கோயிலில் வழிபாடு: ஞாயிற்றுக்கிழமை காலை, வயநாட்டில் உள்ள திருநெல்லி கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி வழிபட்டாா்.