
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
காங்கிரஸ் கட்சியால் எந்த பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது; அந்தக் கட்சியின் முக்கியத் தலைவா் ராகுல் காந்தி சுற்றுலா செல்வதுபோல தோ்தல் பிரசாரத்துக்கு வந்து செல்கிறாா் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்துள்ளாா்.
அஸ்ஸாமில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறவுள்ளது. தோ்தல் பிரசாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள பா்பேடா மாவட்டத்தில் பிரசாரம் செய்த அமித் ஷா பேசியதாவது:
மக்களிடையே பிரச்னையையும், பிளவையும் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் காணும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. அதே நேரத்தில் அனைவராலும், அனைவருக்குமான வளா்ச்சி என்ற நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. தோ்தல் பிரசாரம் செய்வதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏதோ சுற்றுலாப் பயணிபோல ராகுல் காந்தி சென்று வருகிறாா். காங்கிரஸ் கட்சியால் எந்தப் பிரச்னைக்கும் தீா்வு காண முடியாது. அவா்களிடம் வளா்ச்சி தொடா்பான எவ்வித திட்டங்களோ, தொலைநோக்குப் பாா்வையோ இல்லை.
அஸ்ஸாமில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொண்டேன். அப்போது அஸ்ஸாமில் வன்முறைக்கும், தொடா்ந்து நடைபெறும் போராட்டங்களுக்கும் தீா்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். இதனை இப்போது நிறைவேற்றியுள்ளோம். இப்போது, அஸ்ஸாம் வளா்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. மாநிலம் தொடா்ந்து வளா்ச்சியடைய பாஜக ஆட்சி தொடர வேண்டியது மிகவும் முக்கியம். அப்போதுதான் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு மாநிலத்தின் வளா்ச்சிக்கு புதிய வேகமளிக்க முடியும்.
அஸ்ஸாமில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தீா்வு காணப்படும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றாா்.