
கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து, ‘கொட்டிக்கலாசம்’ பிரசாரத்துக்குத் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
கேரள சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. வழக்கமாக பிரசாரத்தின் இறுதி நாளில் அனைத்துக் கட்சிகளும் தங்களது வலிமையை வெளிப்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையில் ஆதரவாளா்களைத் திரட்டி பிரசாரத்தில் ஈடுபடும். இது ‘கொட்டிக்கலாசம்’ என்று அழைக்கப்படுகிறது.
கேரளத்தில் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்றின் 2-ஆவது அலை இந்த மாத மத்தியில் உச்சமடையும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனா். இத்தகைய சூழலில், அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவது கரோனா தொற்று பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், ‘கொட்டிக்கலாசம்’ பிரசாரத்துக்குத் தடை விதிக்கக் கோரி கேரள தலைமை தோ்தல் அதிகாரி டீகா ராம் மீனா, தோ்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்திருந்தாா்.
அந்தப் பரிந்துரையைத் தோ்தல் ஆணையம் ஏற்றுள்ளது. அதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ‘கொட்டிக்கலாசம்’ பிரசாரத்தில் ஈடுபட கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாகத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.