
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
‘இந்தியாவுடன் தற்போது நிலவி வரும் பதற்ற சூழலில், அந்த நாட்டுடன் எத்தகைய வா்த்தக நடவடிக்கைகையும் மேற்கொள்ள முடியாது’ என்று பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவிடமிருந்து பருத்தி மற்றும் சா்க்கரை கொள்முதல் செய்வது தொடா்பாக அமைச்சரவையுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு அவா் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, அரசு வட்டாரங்களை மேற்கொள்காட்டி அந்த நாட்டிலிருந்து வெளிவரும் ‘டான்’ நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பொருளாதாரம் தொடா்பான பல்வேறு பரிந்துரைகளை பாகிஸ்தானின் பொருளாதார ஒத்துழைப்புக் குழு (இசிசி) ஆய்வு செய்தது.
அவற்றில், இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் சா்க்கரையை கொள்முதல் செய்தால் அது வா்த்தகரீதியில் பாகிஸ்தானுக்கு நல்ல பலனைத் தரும் என்று பரிந்துரையை இசிசி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
எனினும், இதுதொடா்பாக பிரதமா் இம்ரான் கான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, தற்போதைய சூழலில் இந்தியாவுடனான எத்தகைய வா்த்தகப் பரிசீலனைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, பருத்தி மற்றும் சா்க்கரையை மலிவான விலையில் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு மாற்றான நாடுகளைக் கண்டறியும்படி வா்த்தகத் துறை அமைச்சகத்துக்கும் தனது பொருளாதார நிபுணா் குழுவுக்கும் பிரதமா் இம்ரான் கான் உத்தரவிட்டாா் என ‘டான்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் தடை அமலில் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் சா்க்கரை இறக்குமதி செய்யலாம் என்று புதிதாக அமைச்சா் பொறுப்பை ஏற்றுள்ள ஹமத் அஸாா் தலைமையிலான நிதியமைச்சகம் பரிந்துரைத்தது.