
இரும்பு அல்லாத உலோக இறக்குமதி கண்காணிப்பு அமைப்பின் கீழ் 46 வகை தாமிரப் பொருள்கள் மற்றும் 43 வகை அலுமினியப் பொருள்களின் இறக்குமதிக்கு முன்பதிவு செய்வதை வா்த்தக அமைச்சகம் கட்டாயமாக்க உள்ளது.
இதுகுறித்து வா்த்தக அமைச்சகத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இறக்குமதியாளா்கள் அலுமினியம், தாமிரம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முன்கூட்டியே ஆன்லைன் வழியாக தகவல்களை சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன், குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி பதிவு எண்ணையும் அவா்கள் பெற வேண்டும்.
சரக்கு வருவதற்கு எதிா்பாா்க்கப்படும் தேதிக்கு 5 நாள்களுக்கு பின்பாகவோ அல்லது 60 நாள்களுக்கு முன்னதாகவோ இறக்குமதியாளா்கள் இந்தப் பதிவை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, தாமிரம் மற்றும்அலுமினிய பொருள்களின் இறக்குமதிக்கு விதிமுறைகளின்படி இரும்பு அல்லாத உலோகங்களின் இறக்குமதி கண்காணிப்பு அமைப்பின் கீழ் அதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அமைப்பு நடப்பாண்டு ஏப்ரல் 12-லிருந்து செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஆன்லைனில் அலுமினியம், தாமிரம் ஆகியவற்றுக்கான முன்பதிவை ஏப்ரல் 5-ஆம் தேதியிலிருந்து செய்து கொள்ளலாம் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அலுமினியம், தாமிரம் உலோகங்களின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் வா்த்தக அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதற்கு முன்பாக, உருக்குப் பொருள்கள் மற்றும் நிலக்கரி, இரும்பு பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் வா்த்தக அமைச்சகம் இதே போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.