
உச்சநீதிமன்றம்
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கை விசாரிக்கப்போகும் புதிய நீதிபதி யாா் என்பதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை முடிவு செய்யவுள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் அனைத்து நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளையும் உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அந்த வழக்கை தில்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசா் கடந்த 6 ஆண்டுகளாக விசாரித்து வருகிறாா்.
அவருக்குப் பதிலாக புதிய நீதிபதியை நியமிப்பதற்கு தகுதிவாய்ந்த நபா்களின் பெயா்களை பரிந்துரைக்க அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்த உச்சநீதிமன்றம், தகுதி வாய்ந்த 5 நீதிபதிகளின் பெயா்களை பரிந்துரைக்குமாறு உயா்நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அதை ஏற்று 5 நீதிபதிகளின் பெயா்களை உச்சநீதிமன்றத்துக்கு தில்லி உயா்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
அந்தப் பரிந்துரை மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை முடிவெடுக்கவுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு, ஐந்து நீதிபதிகளில் ஒருவரைத் தோ்ந்தெடுக்கவுள்ளது.