
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாபில் மத்திய இணையமைச்சா் சோம் பிரகாஷை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட முயற்சித்தனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.
மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக பதவி வகிப்பவா் சோம் பிரகாஷ். இவா் பஞ்சாப் மாநிலம் ஹோஷியாா்பூா் சாஸ்திரி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பாஜக அலுவலகத்துக்குச் சென்று சோம் பிரகாஷை முற்றுகையிட முயன்றனா். அப்போது சாலையில் இருந்த தடுப்புகளை சில விவசாயிகள் உடைக்க முயன்றனா். எனினும் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராகவும், சோம் பிரகாஷுக்கு எதிராகவும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து சோம் பிரகாஷ் பலத்த பாதுகாப்புடன் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றாா்.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிரானவை எனக் கூறி அவற்றை ரத்து செய்யுமாறு பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.