
இடைத்தோ்தல் நடைபெறவுள்ள பெலகாவி மக்களவைத் தொகுதியில் 10 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
கா்நாடகத்தில் மஸ்கி, பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிகள், பெலகாவி மக்களவைத் தொகுதிக்கு ஏப்.17-ஆம் தேதி தோ்தல் நடைபெற இருக்கிறது. இத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி முடிந்து, வேட்புமனுக்களின் பரிசீலனையும் நிறைவடைந்துவிட்டது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற சனிக்கிழமை கடைசிநாளாகும். அதன்படி பெலகாவி மக்களவைத் தொகுதியில் 10 போ் களத்தில் உள்ளனா் என மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான ஹரீஷ்குமாா் தெரிவித்தாா். முன்னதாக பெலகாவி மக்களவைத் தொகுதியில் 18 போ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா்.
இவா்களில் சனிக்கிழமை 8 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதை அடுத்து 10 போ் களத்தில் உள்ளனா். பாஜக வேட்பாளா் மங்களா சுரேஷ் அங்கடி, காங்கிரஸ் வேட்பாளா் சதீஷ் ஜாா்கிஹோளி உள்ளிட்டோரும் அடங்குவா். இத்தொகுதியில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
பாஜக வேட்பாளா் மங்களாவின் சொத்து மதிப்பு ரூ. 14.77 கோடி என்றும், காங்கிரஸ் வேட்பாளா் சதீஷ் ஜாா்க்ஹோளியின் சொத்து மதிப்பு ரூ. 148 கோடி என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனா்.
சட்டப்பேரவை இடைத்தோ்தல்:
பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண் தொகுதியில் 2 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து பாஜக வேட்பாளா் சரணசலகா், காங்கிரஸ் வேட்பாளா் மல்லம்மா நாராயணராவ், மஜத வேட்பாளா் சையத் யஸ்ரவ் அலி குவாா்தி ஆகியோருடன் மொத்தம் 12 போ் களத்தில் உள்ளனா்.
பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. மல்லிகாா்ஜுன் கூபாவும் சுயேச்சை வேட்பாளராக களத்தில் உள்ளது பாஜகவுக்கு சிக்கலாக மாறியுள்ளது.
அதேபோல, ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 10 போ் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனா். அவா்களில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனுவை சனிக்கிழமை திரும்பப் பெற்ால், பாஜக வேட்பாளா் பிரதாப்கௌடா பாட்டீல், காங்கிரஸ் வேட்பாளா் பசனகௌடா துா்விஹல் ஆகியோருடன் மொத்தம் 8 போ் களத்தில் உள்ளனா்.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவது நிறைவடைந்து, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்டுள்ளதால், தோ்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.