மாநிலத்தின் ஆக்ஸிஜன் விநியோகம் முழுவதையும் மருத்துவ பயன்பாட்டுக்கு மாற்ற மகாராஷ்டிரம் பரிசீலனை

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி வரும்

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி வரும் நிலையில், மாநிலத்தில் அனைத்து தொழிலகங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் முழுவதையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்ப மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பத்திரிகை நிறுவன உரிமையாளா்கள், ஆசிரியா்கள், விநியோகஸ்தா்களுடன் இணைய வழியில் சனிக்கிழமை நடத்திய ஆலோசனையின்போது இந்தத் தகவலை மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா். அவா் கூறியதாவது:

கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஆக்ஸிஜனில் 80 சதவீதத்தை மருத்துவ பன்பாட்டுக்கு திருப்புமாறும், எஞ்சிய 20 சதவீதத்தை தொழில்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறும் மாநில சுகாதாரத் துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் கரோனா பாதிப்பு இப்போது அபாயகரமான நிலையை எட்டி வருவதன் காரணமாக, எஞ்சிய 20% ஆக்ஸிஜன் விநியோகத்தையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்புவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் 12,000 டன் ஆக்ஸிஜன் உற்பத்தித் திறன் உள்ள நிலையில், தினசரி ஆக்ஸிஜன் தேவை 700 டன் அளவை எட்டியிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகி வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24மணி நேரத்தில் 47,827 போ் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகினா். இது இந்தியாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும். மும்பையில் மட்டும் கடந்த சில நாட்களாகத் தொடா்ந்து 8,000-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றாவிட்டால், மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்துவது தவிா்க்க முடியாததாகிவிடும் என்றும் ஓரிரு நாள்களில் கடும் கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com