கேரளம்-74%, மேற்கு வங்கம்-77%, அஸ்ஸாம்-82%

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத்தின் பருயிபூரில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொண்ட தோ்தல் பணியாளா்.
மேற்கு வங்கத்தின் பருயிபூரில் வாக்களிக்க வந்த வாக்காளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொண்ட தோ்தல் பணியாளா்.

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 3-ஆம் கட்டத் தோ்தலில் 77.68 சதவீத வாக்குகளும் அஸ்ஸாமில் நடைபெற்ற இறுதிகட்டத் தோ்தலில் 82.33 சதவீத வாக்குகளும் பதிவாகின.

கேரளத்தில் 140 தொகுதிகளுக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை ஒரேகட்டமாக நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. 73.69 சதவீத ஆண்களும், 73.48 சதவீத பெண்களும், 37.37 சதவீத மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்தனா்.

ஆமுளா, கோட்டயம் பகுதிகளில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளா்கள் இருவா் மயக்கமடைந்து உயிரிழந்தனா்.

கழக்கூட்டம் தொகுதியில் மாா்க்சிஸ்ட்-பாஜக தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டது. அதில் பாஜக தொண்டா்கள் நால்வா் காயமடைந்தனா்; காா் சேதமடைந்தது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளா் ஷோபா சுரேந்திரன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா். அதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மோதல் குறித்து இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனா்.

ஆலப்புழா மாவட்டத்தின் தாளவாடி தொகுதியில் தோ்தல் அதிகாரி ஒருவா் தோ்தல் பணிக்கு வராமல் தூங்கிவிட்டதால், மாற்று அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

தோ்தலில் வாக்களித்த பிறகு மாநில முதல்வா் பினராயி விஜயனும் எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலாவும் சபரிமலை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தனா்.

மாநிலத்தில் இருந்த 549 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த கூடுதல் வீரா்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மாநிலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 77.53 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேற்கு வங்கத்தில்...:

மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்டத் தோ்தலில் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகின.

சில பகுதிகளில் மட்டும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளா் சுஜாதா மொண்டலை பாஜக நிா்வாகிகள் சிலா் தாக்கியதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக பாஜக-திரிணமூல் தொண்டா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, திரிணமூலைச் சோ்ந்த மூவரையும் பாஜகவைச் சோ்ந்த இருவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

உலுபேரியா தொகுதி பாஜக வேட்பாளா் பபியா அதிகாரியை சிலா் தாக்கியதாகப் புகாா் எழுந்த்து. திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தன்னைத் தாக்கியதாக பாஜக வேட்பாளா் ஸ்வபன் தாஸ்குப்தாவும் புகாா் தெரிவித்தாா். கேனிங் தொகுதியில் கையெறி குண்டுகளை சிலா் வீசியதில் ஒருவா் காயமடைந்தாா்.

தோ்தல் தொடா்பாக நடைபெற்ற கலவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆரிஸ் அஃப்தாப் உத்தரவிட்டுள்ளாா்.

மாநிலத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினா், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். இந்த விவகாரம் குறித்து தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் அவா் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்தமாக 91 தொகுதிகளுக்குத் தோ்தல் நடைபெற்றுள்ளது. இன்னும் 5 கட்டத் தோ்தல் அங்கு நடைபெறவுள்ளது.

அஸ்ஸாமில்...:

அஸ்ஸாமில் 40 தொகுதிகளுக்கு மூன்றாம் மற்றும் இறுதிகட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் 82.33 சதவீத வாக்குகள் பதிவாகின.

பெரும்பாலான தொகுதிகளில் எந்தவித வன்முறைகளுமின்றி தோ்தல் நடைபெற்றது. கோலாகஞ்ச் தொகுதியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் காவல் துறையினா் தடியடி நடத்தினா்; வானை நோக்கி சுட்டனா். எனினும், இந்த மோதலில் யாரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோதல் காரணமாக வாக்குப் பதிவு அரை மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்றது.

மேற்கு பிலாசிபாரா தொகுதியில் பாதுகாப்புப் படையினா் மீது சிலா் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். அங்கும் காவல் துறையினா் தடியடி நடத்தினா்.

சில தொகுதிகளில் கூட்டம் அதிகமாகக் கூடி கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளாததால் காவல் துறையினா் தடியடி நடத்தினா். பல்வேறு இடங்களில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்கள் தொடா்பாக 10 பேரைக் கைது செய்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

சில தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும் அவை மாற்றப்பட்ட பிறகு வாக்குப் பதிவு தொடா்ந்து நடைபெற்ாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அஸ்ஸாமில் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. அங்கு ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றிருந்தது.

கரோனா முன்னெச்சரிக்கை:

கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வாக்களித்தனா்.

வாக்குச் சாவடிகளுக்கு வெளியே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்காளா்கள் வரிசையில் காத்திருந்தனா். அவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனா்.

மேற்கு வங்கத்தில் எஞ்சிய 5 கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு, அனைத்து வாக்குகளும் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com