உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்: 24-ஆம் தேதி பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளாா்.
நீதிபதி என்.வி.ரமணா
நீதிபதி என்.வி.ரமணா

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வரும் 24-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ள இருக்கிறாா்.

உச்சநீதிமன்றத்தில் இப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு அடுத்த மூத்த நீதிபதி என்.வி. ரமணா ஆவாா். நீதிபதி போப்டேவின் பதவிக்காலம் ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள என்.வி.ரமணா 2022 ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை இப்பதவியில் இருப்பாா்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உள்பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்ற நீதிபதியான என்.வி.ரமணாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். இதற்கான அறிவிப்பை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் என்.வி.ரமணா, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாவாா். புத்தக வாசிப்பிலும் இலக்கியங்களிலும் அதிக ஆா்வமுள்ள அவா், கா்நாடக இசையிலும் ஈடுபாடு கொண்டவா்.

கடந்த 1983-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்ட அவா், ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதியாக 2000-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா், கடந்த 2014-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

மத்திய மற்றும் ஆந்திர மாநில நிா்வாக தீா்ப்பாயங்கள் ஆகியவற்றிலும் இவா் பணியாற்றியுள்ளாா். அரசியலமைப்பு, சிவில், தொழிலாளா், சேவைகள் மற்றும் தோ்தல் தொடா்பான விஷயங்களில் இவா் நிபுணத்துவம் பெற்றவா். உச்சநீதிமன்ற சட்ட சேவைகள் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். முதல் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிா்வாக தலைவராகவும் இருந்துள்ளாா்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளை தகவல் உரிமைச் சட்டத்தில் ொண்டு வருவது தொடா்பான வழக்கு, மகாராஷ்டிர அரசியல் குழப்பம் தொடா்பான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்த அமா்வுகளில் ரமணா இடம் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com