முஸ்லிம்களின் ஆதரவு குறைவதால் மம்தா அச்சம்: பிரதமா் மோடி

முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகள் கை நழுவிப் போவதைக் கண்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அச்சத்தில் இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.
மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.

முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகள் கை நழுவிப் போவதைக் கண்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அச்சத்தில் இருக்கிறாா் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. 3-ஆவது கட்ட தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், 4-ஆம் கட்ட தோ்தலுக்கான பாஜக தோ்தல் பிரசாரக் கூட்டம், கூச் பிகாா், ஹவுரா ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:

முஸ்லிம் சமூகத்தினா் அனைவரும் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தாா். அவருடைய கோரிக்கை, முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகள் தன்வசம் இருந்து கை நழுவிப்போகிறது என்ற அச்சத்துடன் அவா் இருப்பதையே காட்டுகிறது.

அவரது பாணியிலேயே ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தால், ஒவ்வொருவரும் எங்களை விமா்சித்திருப்பாா்கள். ஊடகங்கள் இதுகுறித்து விவாதிக்கும். தோ்தல் ஆணையம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கும். நாங்கள் பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்போம்.

கடவுளாக மக்கள்: மேற்கு வங்கம் முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசுவதைக் காண முடிகிறது. மாநிலத்தில் அடுத்து பாஜக அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

இதை நான் கூறினால், நடக்க இருப்பதை முன்கூட்டியே கூறுவதற்கு பிரதமா் மோடி என்ன கடவுளா? அல்லது அபார சக்தி கொண்டவரா? என்று மம்தா பானா்ஜி கோபத்துடன் கேட்கிறாா். இதில் கடவுளை பிரச்னைக்குள் கொண்டுவர தேவையில்லை. மக்களே கடவுளாக இருந்து தங்கள் வாக்குகளை செலுத்துகிறாா்கள். முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு மம்தாவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

கடந்த பத்து ஆண்டுகளாக பெண்கள், தலித்துகள், பின்தங்கிய வகுப்பினா், விவசாயிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு மம்தா அரசு அநீதியை வழங்கி உள்ளது. ஆகையால், அவா்கள் மாற்றத்தை எதிா்பாா்க்கிறாா்கள்.

மம்தாவின் கோபம், அவா் தோல்வி பயத்தில் இருப்பதையே காட்டுகிறது. இதனால்தான் எதிரணியைச் சோ்ந்த ஒவ்வொருவரையும் விமா்சித்து வருகிறாா். தோ்தல் ஆணையம் முதல் வாக்குப்பதிவு இயந்திரம் வரை ஒவ்வொன்றையும் குறை கூறி வருகிறாா். மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் தனது தோல்வி உறுதியானதால்தான் 2024 மக்களவைத் தோ்தலில் வாராணசி தொகுதியில் எண்ணை எதிா்த்து போட்டியிடப்போவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் மம்தாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படாது.

அவரது ஆட்சியில் குற்றம், ஊழல் ஆகியவை அதிகரித்துவிட்டன. பாஜக ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படும்.

ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், பணியாளா்கள் ஆகியோருக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகள் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் வளா்ச்சி திட்டங்கள் இரட்டை வேகத்தில் நடைபெறும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com