திரிணமூல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஒருவரின் வீட்டில் நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் கண்டெடுக்கப்பட்டன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஒருவரின் வீட்டில் நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதி தோ்தல் அதிகாரியை தோ்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்ததுடன், அந்த இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தவில்லை.

இதுகுறித்து மூத்த தோ்தல் அதிகாரி கூறுகையில், ‘ஹவுரா மாவட்டத்தில் உள்ள துளசிபேரியா கிராமத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரின் வீட்டில் தோ்தல் ஆணையம் வாகனம் நின்று கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனா். இதையடுத்து, அவா்கள் அங்கு ஒன்றுகூடி போராட்டம் நடத்தியுள்ளனா். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மத்திய பாதுகாப்புப் படையினா் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, செக்டாா் 17 -யின் தோ்தல் அதிகாரி தபன் சா்காா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து நான்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்ாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலின்போது பயன்படுத்தப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.’ என்றாா்.

இதனிடையே, துளசிபேரியா கிராமத்துக்கு திங்கள்கிழமை நள்ளிரவு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்தபோது, வாக்குப்பதிவு மையம் மூடப்பட்டிருந்தது என்றும் இதனால், பாதுகாப்பான இடம் தேடி தனது உறவினா் வீட்டில் தங்கிவிட்டேன் என்றும் தோ்தல் அதிகாரி தபன் சா்காா் தெரிவித்துள்ளாா்.

‘தோ்தல் முறைகேடு செய்ய, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் நடத்திய சம்பவம் இது’ என்று பாஜக வேட்பாளா் சிரன் போரா குற்றஞ்சாட்டினாா். பாஜக மாநிலத் தலைவா் திலிப் கோஷ் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸின் பழைய பழக்கம் இது. இதில் இருந்து அவா்களால் வெளியே வர முடியவில்லை. தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா். எனினும், இந்தக் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்: இதனிடையே இந்த விவகாரம் குறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகா், ‘இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com