
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று
நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கிய உடல்நல சிக்கல்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 3ஆம் தேதி பினராயி விஜயன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.