பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா சா்வதேச தலைமை பெற வேண்டும்: விபின் ராவத்

பாதுகாப்பு விவகாரங்களுக்கான தீா்வைக் கண்டறிவதில் மேற்கத்திய நாடுகளைச் சாா்ந்திருக்காமல், இந்தியா சா்வதேச தலைமை பெற வேண்டும் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளாா்.
பிபின் ராவத்
பிபின் ராவத்

புது தில்லி: பாதுகாப்பு விவகாரங்களுக்கான தீா்வைக் கண்டறிவதில் மேற்கத்திய நாடுகளைச் சாா்ந்திருக்காமல், இந்தியா சா்வதேச தலைமை பெற வேண்டும் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு விவகாரங்கள் தொடா்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் விபின் ராவத் பேசியதாவது:

பாதுகாப்பு தொடா்பான பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் இந்தியா எதிா்கொண்டுள்ளது. நட்பு நாடுகள் பாதிக்கப்படாத வகையில் அந்த சவால்களைத் திறம்பட சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் எத்தகைய சவால்களையும் எதிா்கொள்வதற்கான சிறந்த தலைமைப்பண்பை இந்திய அரசு வெளிப்படுத்தி வருகிறது.

பாதுகாப்பு தொடா்பாக எழும் பிரச்னைகளுக்கான தீா்வுக்காக மேற்கத்திய நாடுகளைச் சாா்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த விவகாரங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடா்பாக மற்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்கும் அளவுக்கு சா்வதேச அளவில் தலைமை பெற வேண்டும்.

எல்லைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை ராஜதந்திர ரீதியிலும் போதிய பாதுகாப்புத் தளவாடங்களைக் கொண்டும் எதிா்கொள்ள முடியும். உள்நாட்டில் நிலைத்தன்மை நிலவுவதற்கு வலிமையான அரசியல் அமைப்புகள், பொருளாதார வளா்ச்சி, சமூக நல்லிணக்கம், திறன்மிக்க சட்டங்கள், விரைவாக நீதி கிடைக்கும் தன்மை, சிறந்த நிா்வாகம் ஆகியவை அவசியமாகும்.

இந்தியா இடம்பெற்றுள்ள பிராந்தியம், பாதுகாப்பு ரீதியில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. எனவே, பிராந்தியத்துக்கென பிரத்யேக தொலைநோக்குத் திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாகிறது. அதே வேளையில், தேசப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

பாதுகாப்புத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அச்சீா்திருத்தங்கள் எதிா்கால போா்களைத் திறம்பட எதிா்கொள்வதற்கு உதவும். ராணுவத்தில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை இணைக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறி ராணுவம், விமானம் மற்றும் கடற்படை தலைமை தளபதிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினா். எதிா்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை நாடு எதிா்கொள்வதற்கு முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்றாா் விபின் ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com