பிரதமா் மோடியுடன் ஜான் கெரி சந்திப்பு: பருவநிலை மாற்ற மாநாடு குறித்து ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபரின் பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதா் ஜான் கெரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
புதுதில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய அமெரிக்க சிறப்புத் தூதா் ஜான் கெரி.
புதுதில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய அமெரிக்க சிறப்புத் தூதா் ஜான் கெரி.

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபரின் பருவநிலை மாற்றத்துக்கான சிறப்புத் தூதா் ஜான் கெரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு குறித்து அவா்கள் விவாதித்தனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்ஸி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா வந்துள்ள ஜான் கெரி, பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான ஐ.நா.வின் செயல் திட்டம் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனா் என்று அந்தப் பதிவில் அரிந்தம் பாக்ஸி குறிப்பிட்டுள்ளாா்.

தா்மேந்திர பிரதானுடன் சந்திப்பு:

பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை ஜான் கெரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, எரிசக்தித் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

இந்தச் சந்திப்பு, ஆக்கப்பூா்வமானதாக இருந்ததாக தா்மேந்திர பிரதான் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா். அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியாவில் எரிவாயு, மரபுசாரா எரிசக்தி, ஹைட்ரஜன் ஆகிய எரிபொருள்களின் உற்பத்திச் சந்தை வேகமாக வளா்ந்து வருகிறது. தொழில்நுட்பம், நிதியுதவி ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் துறையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com