காணாமல்போன சிஆர்பிஎஃப் வீரரின் படம் வெளியீடு

சத்தீஸ்கரில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின்போது நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்ட வீரர் குடிசையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
காணாமல்போன சிஆர்பிஎஃப் வீரரின் படம் வெளியீடு


பிஜாப்பூர்: சத்தீஸ்கரில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின்போது நக்ஸல்களால் கடத்திச் செல்லப்பட்ட வீரர் குடிசையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 3-ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் துப்பாக்கிச் சண்டையில் 22 வீரர்கள் பலியாகினர்.
சிஆர்பிஎஃப் படையின் சிறப்புப் பிரிவான கோப்ரா படையின் 210-ஆவது பட்டாலியன் பிரிவில் காவலராகப் பணிபுரிபவர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ். இவர்  பிஜாப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் வனப் பகுதியில் நக்ஸல்கள் எதிர்ப்புப் படையின் ஓர் அணியில் இடம் பெற்றிருந்தார். துப்பாக்கிச் சண்டை சம்பவம் நிகழ்வதற்கு முன் வெள்ளிக்கிழமை இரவு அவர் பணியில் இருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை.
 அவர் ஒரு குடிசையில் நக்ஸல்கள் யாரும் இன்றி தனிமையில் இருப்பது போன்று புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பஸ்தர் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ் பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை கூறியதாவது: நிலைமையை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். கடத்திச் செல்லப்பட்ட வீரரை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார். 
இதற்கிடையே மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்யா சிறப்பு மண்டல கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் விகல்ப் பெயரில் ஓர் அறிக்கை ஹிந்தியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சிஆர்பிஎஃப் வீரர் மன்ஹாûஸ சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து எங்கள் வீரர்கள் கடத்தினர். அவரை பத்திரமாக விடுவிக்க வேண்டுமெனில் ஒரு மத்தியஸ்தரை அரசு நியமிக்க வேண்டும். சத்தீஸ்கர் அரசு மத்தியஸ்தர்களை நியமித்த பிறகு மன்ஹாஸ் விடுவிக்கப்படுவார். அதுவரை அவர் எங்கள் சிறைபிடிப்பில் பாதுகாப்பாக இருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், " அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஆராயப்பட்டு வருகிறது.  காணாமல்போன வீரரை மீட்பதற்காக அவரைத் தேடும் பணி மட்டுமின்றி உள்ளூர் கிராம மக்கள், சமூக அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்களுடனும் தொடர்பு கொண்டு அவரைப் பற்றிய தகவல் அறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
கடந்த சனிக்கிழமை தேகல்கூடா- ஜோனகூடா கிராமப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையின்போது, பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். பலியான 22 பேரில் கோப்ரா கமாண்டோ வீரர்கள் 7 பேர், பஸ்தாரியா பட்டாலியன் வீரர் ஒருவர், மாவட்ட வனக் காவலர்கள் 8 பேர், சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் அடங்குவர். இந்தச் சண்டையில் பத்துக்கும் மேற்பட்ட நக்ஸல்கள் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com