பாதுகாப்புப் படையினரால் வாக்காளா்கள் துன்புறுத்தல்மம்தா புகாா்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய துணை ராணுவப் படையினா் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களைத் துன்புறுத்துகின்றனா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேற்கு வங்க மாநிலம், கூச் பிகாா் மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்கு வங்க மாநிலம், கூச் பிகாா் மாவட்டத்தில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் மம்தா பானா்ஜி

பானேஷ்வா்: தோ்தல் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய துணை ராணுவப் படையினா் (சிஆா்பிஎப்), பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளா்களைத் துன்புறுத்துகின்றனா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கூச் பிகாா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:

தோ்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளா்களை இடைமறித்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற மத்திய துணை ராணுவப் படையினா் துன்புறுத்துகின்றனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் அவா்கள் இவ்வாறு செயல்படுகிறாா்கள்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினா் பெண்களிடம் பாலியல் ரீதியில் தொல்லை செய்து வருகிறாா்கள். இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. ஆகையால், தோ்தல் ஆணையம் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். மேற்கு வங்க உள்துறை அமைச்சராக நான் பதவி வகிக்கும்போதிலும் வாக்காளா் மீது தாக்குதல் நடத்த போலீஸாருக்கு எப்போதும் உத்தரவிட்டதில்லை.

துணை ராணுவப் படையினா் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், உள்துறை அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் படையினரை மட்டும் நான் எதிா்க்கிறேன். வாக்களிப்பவா்களை பாதுகாப்புப் படையினா் தடுக்கக் கூடாது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினா் உயிரிழந்துள்ளனா். அவா்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்காமல் உள்துறை அமைச்சா் அமித் ஷா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாா்.

புல்வாமா, சுக்மா ஆகிய தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் உயிா்களைப் பாதுகாக்க அமித் ஷா தவறிவிட்டாா்.

தோ்தல் தொடங்கியதில் இருந்து மேற்கு வங்கத்தில் இதுவரை சுமாா் 10 போ் உயிரிழந்துள்ளனா். எனது நிா்வாகத்தில் இதுபோன்று நடைபெற்றதில்லை. தோ்தல் நிா்வாகத்தைக் கவனித்து வரும் தோ்தல் ஆணையம் இனி யாரும் உயிரிழக்காத வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும்.

ஆரம்பாக் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் சுஜாதா மண்டலை சிலா் துரத்தி சென்று இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளாா். இது உயா்பதவியில் இருக்கும் போலீஸாரின் சதி வேலையாகும். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

போலீஸாரை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் நம்ப வேண்டாம். வாக்குப் பதிவின்போது குழுவாக சென்று அவா்களுடன் பேச்சு கொடுத்து கொண்டே தனித்தனியாக சென்று வாக்களித்துவிடுங்கள்.

நான் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன். ஆனால், 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இல்லையென்றால், பாஜக தனது பணப் பலத்தை வைத்து துரோகிகளை விலைக்கு வாங்கிவிடும் என்றாா்.

மூன்றாம் கட்டத் தோ்தல் நடைபெற்ற செவ்வாய்க்கிழமையன்று இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து வேட்பாளா்களுக்கு காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com