2047-க்குள் புதிய இந்தியாவை கட்டமைப்போம்

இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 
2047-க்குள் புதிய இந்தியாவை கட்டமைப்போம்


தண்டி: இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ளதை சிறப்பிக்கும் வகையில் "சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்' என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. 
அந்தக் கொண்டாட்டங்களின் முதல் நிகழ்ச்சியாக, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை பாதயாத்திரை நடைபெற்றது. கடந்த 1930-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் இந்தப் பாதயாத்திரை நடத்தப்பட்டது. 
25 நாள்கள் நடைபெற்ற யாத்திரை தண்டியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
நாடு சுதந்திரமடைந்தது முதல் விடுதலைப் போராட்ட வீரர்கள் காட்டிய வழியில் நாடு தொடர்ந்து பயணித்து வருகிறது. அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வதே நாட்டின் கொள்கையாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 
இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் தற்போது மதித்து பாராட்டி வருகின்றன. இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசுகளின் முதல்வர்கள் ஆகியோரின் தலைமையே முக்கிய காரணமாகும். 
நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள 2047-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும். அதற்காக அடுத்த 25 ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் தற்போதைய கொண்டாட்டங்களின்போதே வகுக்க வேண்டும். 
விடுதலைப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் உப்பு சத்தியாகிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறவழியில் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி முன்னெடுத்தார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான ஊக்கத்தை அளிக்கின்றனர். 
அகிம்சை வழியில் நாட்டுக்கு சுதந்திரம் பெறுவது என்பது தனிச்சிறப்பு மிக்கது. விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் ஆகியோர் விரும்பியபடி கடந்த 75 ஆண்டுகளில் நாட்டைக் கட்டமைத்துள்ளோம். பல அரசுகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. 
இந்தியா தன்னுடைய வளர்ச்சியை மற்ற நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலுடன் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றார் வெங்கையா 
நாயுடு. 
இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மாநில முதல்வர் விஜய் ரூபானி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், மத்திய கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com