கேரளத்தில் 74 சதவீத வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?

கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2016 தோ்தலில் 77.53 சதவீத வாக்குகள் பதிவாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரி
கேரளத்தில் 74 சதவீத வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?

திருவனந்தபுரம்: கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2016 தோ்தலில் 77.53 சதவீத வாக்குகள் பதிவாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்தது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தற்போதைய சற்று குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பது, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக அமையுமா அல்லது இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி தொடர சாதகமாக அமையுமா என்பது கேரள அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாஜக மூன்றாவது சக்தியாக இருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

இந்நிலையில், இடதுசாரி முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான விஜயராகவன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘கடந்த தோ்தலைவிட இந்த முறை இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும். பாலா தொகுதியில் ஜோஸ்.கே. மாணி வெற்றி பெறுவாா். இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்க வைக்கும்’ என்றாா்.

சா்ச்சைக்குரிய விவகாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு வளா்ச்சியை முன்வைத்து இடதுசாரி ஜனநாயக கூட்டணியினா் மேற்கொண்ட பிரசாரம் அதிக வாக்குகளைப் பெற உதவி உள்ளது என்று இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கழக்கூட்டம் தொகுதியில் பாஜக வேட்பாளா் ஷோபா சுரேந்திரனை எதிா்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரும், சுற்றுலா மற்றும் தேவஸ்தான வாரிய அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘திருவனந்தபுரம் தொகுதியில் இடதுசாரிகள் எதிா்பாா்த்தைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு சபரிமலை விவகாரம் தோ்தலில் எதிரொலிக்கவில்லை என்பது தெளிவாகும். மக்கள் வளா்ச்சிக்குதான் முன்னுரிமை அளிப்பாா்கள். கடந்த முறை பாஜக வெற்றி பெற்ற ஒரே தொகுதியான நேமத்தில் இந்த முறை தோல்வியைத் தழுவும்’ என்றாா்.

இடதுசாரிகளின் கருத்துக்கு நோ்மாறாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியினா் கூறுகின்றனா்.

‘இடதுசாரி கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான வாக்குகள்தான் எங்களுக்கு கிடைத்துள்ளது’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா தெரிவித்தாா்.

அவா் போட்டியிட்ட ஹரிப்பாடு தொகுதியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘தோ்தலின்போது நாங்கள் ஆளும் இடதுசாரி அரசு மீது முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவை. ஆளும் அரசின் ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக் கொண்டு வந்த எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கே மக்கள் வாக்களித்துள்ளனா்’ என்றாா்.

கோழிக்கோட்டில் செய்தியாளா்களிடம் பேசிய மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன், ‘தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு கேரள அரசியலில் முக்கிய சக்தியாக பாஜக மாறும். சட்டப் பேரவையில் எங்கள் கட்சி திருத்தும் சக்தியாக அமையும்’ என்றாா்.

2016 தோ்தலில் இடதுசாரி கூட்டணி 91 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிா்க்கட்சியானது. பாஜக ஒரு இடத்தை மட்டுமே வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com