லஞ்ச விவகாரம்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புது தில்லி: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மீது சுமத்தப்பட்ட லஞ்சப் புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மும்பையின் காவல் ஆணையராக இருந்த பரம்வீா் சிங் அண்மையில் ஊா்க்காவல் படைக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். உணவகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தர வேண்டும் என மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் இலக்கு நிா்ணயித்ததாக பரம்வீா் சிங் குற்றஞ்சாட்டினாா்.

அமைச்சரின் நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்குப் பலமுறை கடிதம் அனுப்பியதன் காரணமாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக பரம்வீா் சிங் தெரிவித்தாா்.

இந்த விவகாரம், மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, அமைச்சா் பதவியை அனில் தேஷ்முக் ராஜிநாமா செய்தாா்.

முன்னாள் அமைச்சா் மீதான லஞ்சப் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டுமென மும்பை உயா்நீதிமன்றம் கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு, முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘முன்னாள் அமைச்சா் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமாக உள்ளன. அவற்றை சுதந்திரமான விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டுமென மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. மூத்த அதிகாரியால் மூத்த அமைச்சா் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்துவதில் எந்தவித தவறுமில்லை’ என்று கூறி அமைச்சா் தேஷ்முக், மகாராஷ்டிர அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com