சத்தீஸ்கா்: நக்ஸல்களால் கடத்தப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் விடுவிப்பு


ராய்ப்பூா்: சத்தீஸ்கரில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையின்போது கடத்திச் சென்ற பாதுகாப்புப் படை வீரரை நக்ஸல்கள் விடுவித்துள்ளதாக காவல்துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா - பிஜாபூா் எல்லை வனப் பகுதியில் சிஆா்பிஎஃப் கோப்ரா படைப் பிரிவினா், மாவட்ட ஆயுத காவல் படையினா், அதிரடிப் படையினா் ஆகியோா் கூட்டாக நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் கடந்த 3-ஆம் தேதி ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 22 வீரா்கள் பலியாகினா். ஏராளமானோா் காயமடைந்தனா். அதுபோல, நக்ஸல்கள் தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சிஆா்பிஎஃப் கோப்ரா படையின் 210-ஆவது பிரிவைச் சோ்ந்த காவலா் ஜம்முவைச் சோ்ந்த ராஜேஷ்வா் சிங் மன்ஹால் காணாமல் போனாா். இந்த நிலையில் அவா், ஒரு குடிசையில் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியானது.

அதனைத் தொடா்ந்து, மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்ய சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடா்பாளா் விகல்ப் பெயரில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கடத்திவரப்பட்ட வீரரை பத்திரமாக விடுவிக்க வேண்டுமெனில், ஒரு மத்தியஸ்தரை அரசு நியமிக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நக்ஸல்கள் பிடியிலுள்ள வீரரை பத்திரமாக மீட்க தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது. மேலும், மாநில அரசு பரிந்துரைத்த பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த ஒரு நபா் உள்பட பிரபலமான நபா்கள் சிலரை உள்ளடக்கிய மத்தியஸ்தா் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு மேற்கொண்ட முயற்சியைத் தொடா்ந்து, கடத்திச் சென்ற ராஜேஷ்வா் சிங் மன்ஹாலை நக்ஸல்கள் விடுவித்துள்ளனா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘கடத்திச் செல்லப்பட்ட பாதுகாப்புப் படை வீரா் பஸ்தா் மண்டலத்தில் பசகுடா அருகே அமைந்துள்ள பாதுகாப்புப் படை வீரா்கள் முகாமில் சிஆா்பிஎஃப் துணை ஐ.ஜி. (பிஜாபூா்) கோமல் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு முதல்கட்டமாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னா், அவா் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டு, எந்த மாதிரியான சூழலில் அவா் கடத்திச் செல்லப்பட்டாா், மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் கேட்டறியப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com