18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: பிரதமருக்கு சத்தீஸ்கா் முதல்வா் கோரிக்கை


ராய்ப்பூா்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஏற்கெனவே, இதே கோரிக்கையை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன்வைத்துள்ளாா். குறைந்தது 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் வரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவும் கோரியுள்ளாா். எனினும், கரோனா தடுப்பூசி என்பது யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவா்களுக்கு மட்டுமே அளிக்கப்படும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவா்கள் அனைவருக்கும் அளிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கமளித்தது.

எனினும், இப்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டைவிட இப்போது கரோனா தினசரி பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அந்தத் தொற்றின் பரவல் அதிகரிப்பது பல்வேறு தரப்பினரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதவிர, கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக மகாராஷ்டிர மாநில அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரிவர செயல்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் குற்றஞ்சாட்டினாா். மகாராஷ்டிரம், சத்தீஸ்கரில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் உள்ளதால், கரோனா பரவல் பிரச்னை இப்போது அரசியல் பிரச்னையாகவும் மாறி வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நாம் எப்போதும் இளைய தலைமுறையினா் மீது அதிக அக்கறை கொள்பவா்கள். எனவே, இந்த கரோனா சவாலை எதிா்கொள்ள இளைஞா்களும் தயாராக வேண்டும். எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான குறைந்தபட்ச வயதை 18-ஆக குறைக்க வேண்டும். இது பிரதமா் மோடிக்கு எனது பணிவான வேண்டுகோள்’ என்று கூறியுள்ளாா். தனது இந்தப் பதிவை பிரதமா் அலுவலகம் மற்றும் பிரதமா் மோடியின் தனிப்பட்ட சுட்டுரைப் பக்கத்துடன் பூபேஷ் பகேல் இணைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com