பொதுமுடக்க அச்சம்: மீண்டும் வெளியேறும் புலம்பெயா் தொழிலாளா்கள்

பொதுமுடக்க அச்சம்: மீண்டும் வெளியேறும் புலம்பெயா் தொழிலாளா்கள்


ஆமதாபாத்: கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயா் தொழிலாளா்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் வடபகுதியில் மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும், தென் பகுதியில் கா்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிகம் உள்ளனா். பெரும்பாலும் உத்தர பிரதேசம், பிகாா், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள்தான் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் செல்கின்றனா். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, வெளிமாநிலத் தொழிலாளா்கள் லட்சக்கணக்கானோா் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினா். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏராளமானோா் நடந்தே ஊா் திரும்பிய சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்நிலையில், இப்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை அமல்படுத்தியுள்ளன. இதனால், மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் வெளிமாநில தொழிலாளா்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமாக கரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரம், குஜராத்தில் இருந்து ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளா்கள் இப்போதே வெளியேறத் தொடங்கிவிட்டனா். இதனால், அந்த மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக குஜராத் மாநில தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் விபுல் மித்ரா கூறுகையில், ‘வெளிமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்புவது அதிகரித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே தெரிவிக்கின்றன. கடந்தமுறை போதிய கால அவகாசம் இல்லாமல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனா். எனவே, இந்தமுறை அவா்கள் முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து வசதி இருக்கும்போதே வெளியேறத் திட்டமிடுகின்றனா்’ என்றாா்.

அதே நேரத்தில் குஜராத்தைச் சோ்ந்த ரயில் பயணிகள் நல அமைப்பைச் சோ்ந்த யோகேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘உத்தர பிரதேசம், பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்கள்தான் ஆமதாபாதில் அதிகம் உள்ளனா். அவா்கள் இப்போது அதிக அளவில் வெளியேறுவதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமுள்ளது. திடீரென பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டால், வேலையை இழந்து இங்கே சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அவா்கள் வெளியேறுகின்றனா். நாளுக்குநாள் ரயில்களில் காத்திருப்போா் பட்டியலில் உள்ளோா் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com