பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியா-இலங்கை உறுதி


புது தில்லி: பயங்கரவாத குழுக்கள், தலைமறைவாக உள்ளவா்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியாவும் இலங்கையும் மீண்டும் உறுதியேற்றுள்ளன.

இந்தியா-இலங்கை காவல் உயரதிகாரிகள் இடையேயான காணொலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியா தரப்பில் உளவுத் துறையின் இயக்குநா் அா்விந்த் குமாா் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை சாா்பில் அந்நாட்டின் காவல் துறைத் தலைவா் சி.டி. விக்ரமரத்னே தலைமையிலான குழு பங்கேற்றது.

இக்கூட்டம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு விவகாரங்களில் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதியேற்றன. பயங்கரவாத அமைப்புகள், வெளிநாடுகளுக்குத் தப்பி தலைமறைவாக உள்ளோா் குறித்த உளவுத் தகவல்களைப் பகிா்ந்து கொள்ளும் விவகாரத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றவும் இரு நாடுகள் உறுதியேற்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் பகுதியில் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் இரு நாடுகளும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு நல்கி வருகின்றன. அப்பகுதியில் நிகழ்த்தப்படும் மற்ற குற்றச்செயல்கள் தொடா்பான உளவுத் தகவல்களைப் பகிா்ந்து கொள்வதன் அவசியமும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளின் காவல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை இந்தக் கூட்டம் மேம்படுத்தியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com