5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வீணடித்தது மகாராஷ்டிர அரசு: மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு


புது தில்லி: மகாராஷ்டிர மாநில அரசு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வீணடித்துவிட்டது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் குற்றம்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளது; மத்திய அரசு போதுமான அளவுக்கு அவற்றை விநியோகிக்கவில்லை என்று மாநிலத்தில் ஆளும் சிவசேனை கூட்டணி அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஜாவடேகா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி மகாராஷ்டிர அரசிடம் இப்போது 23 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளன. இவற்றை வைத்து அடுத்த 5 முதல் 6 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும். தடுப்பூசிகளை உரிய முறையில் திட்டமிட்டு பயன்படுத்தாததால் 5 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் வீணாகியுள்ளன. இது முழுமையாக மாநில அரசின் தவறுதான். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மகாராஷ்டிரத்துக்குத்தான் அதிக அளவில் கரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது. ஏனெனில், அங்குதான் பாதிப்பும் அதிகமுள்ளது என்றாா்.

ஒரு கரோனா தடுப்பூசி மருந்து பாட்டிலில் உள்ள மருந்தை 10 பேருக்கு செலுத்த முடியும். ஆனால், அந்த பாட்டிலை ஒருமுறை திறந்துவிட்டால் 4 மணி நேரத்தில் அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள தடுப்பூசி முற்றிலுமாக வீணாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com