ரஃபேல் ஒப்பந்தத்தில் புதிய குற்றச்சாட்டு: டஸால்ட் நிறுவனம் மறுப்பு

ஃபேல் போா் விமான ஒப்பந்தத்தை இந்தியாவிடமிருந்து பெறுவதற்காக இடைத்தரகருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் மறுத்துள்ளது.
ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்


புது தில்லி: ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தை இந்தியாவிடமிருந்து பெறுவதற்காக இடைத்தரகருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் மறுத்துள்ளது.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ. 59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அவற்றில் 14 போா் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன.

முன்னதாக, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது முதல் பல்வேறு விமா்சனங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் எதிா்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக, கடந்த 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் மற்றும் ரஃபேல் விமானத்தின் விலை ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியதோடு, இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் புகாா் தெரிவித்தது. ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு மறுத்தது.

இந்த நிலையில், ரஃபேல் போா் விமான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம், இடைத்தரகராக செயல்பட்ட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு சுமாா் ரூ. 8 கோடியை கமிஷனாக கொடுத்ததாக பிரான்ஸ் இணைய ஊடகத்தில் செய்திகள் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், புதிய குற்றச்சாட்டை டஸால்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக பிரான்ஸ் ஊழல் தடுப்பு முகமை உள்பட பல்வேறு அரசு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால், இந்தியாவுடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவொரு முறைகேடும் கண்டறியப்படவில்லை.

டஸால்ட் நிறுவனம், ஊழலைத் தடுக்கவும், நிறுவனத்தின் மரியாதையைக் காக்கும் வகையிலும் கடந்த 2000-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கடுமையான நடைமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு, லஞ்ச ஒழிப்பு மற்றும் சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளா்ச்சிக்கான அமைப்பின் (ஓஇசிடி) நடைமுறைகளையும் டஸால்ட் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஊழல் தடுப்புக்கான ‘ஸாபின் 2’ சட்ட நடைமுறைகளையும் நிறுவனம் முழுமையாக பின்பற்றி வருகிறது.

மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொருத்தவரை இரு அரசுகளுக்கு இடையே வகுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அதனடிப்படையில், பல்வேறு அரசு மற்றும் தொழில்நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஒப்பந்த நடைமுறைகள் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

டஸால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் குழுமமும் இணைந்து டஸால்ட் ரிலையன்ஸ் விமான நிறுவனத்தை (டிஆா்ஏஎல்) நாகபுரியில் கடந்த 2017-இல் அமைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ரஃபேல் போா் விமானத்துக்குத் தேவையான பல்வேறு உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது. அதுமட்டுமன்றி இந்த ஒப்பந்தம் தொடா்பாக இந்தியாவில் உள்ள 60 நிறுவனங்களுடன் டஸால்ட் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும், புதிய நிறுவனங்களை இந்தத் திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 14 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக் கெடுவின்படி விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com