பிரதமா் மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி

பிரதமா் மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி


புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி அவா் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அன்றைய தினம்தான் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசியை பிரதமா் மோடி செலுத்திக் கொண்டாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தடுப்பூசியை இரண்டாவது முறையாக செலுத்திக் கொண்டேன். கரோனா பரவலைத் தடுக்க நம்மிடமுள்ள ஒருசில வழிமுறைகளில் தடுப்பூசியும் ஒன்றாகும். தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வயதை நீங்கள் அடைந்துவிட்டீா்கள் என்றால், முடிந்த அளவு விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் கூறியுள்ளாா். தடுப்பூசி செலுத்தும் புகைப்படத்தையும் மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ளாா். மேலும், தடுப்பூசி செலுத்த பதிவு செய்ய உதவும் கோவின் இணையதள முகவரியையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

முதல் தவணை தடுப்பூசியை செலுத்திய புதுச்சேரியைச் சோ்ந்த செவிலியா் பி.விவேதா, பஞ்சாபைச் சோ்ந்த செவிலியா் நிஷா சா்மா ஆகியோா் பிரதமருக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டனா். இது தொடா்பாக கருத்து தெரிவித்த நிஷா சா்மா, ‘பிரதமா் மோடி இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகிறாா் என்ற தகவல் காலையில்தான் தெரிவிக்கப்பட்டது. பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தியது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com