தெலங்கானா: இரு எம்எல்ஏக்களையும் இழந்தது தெலுங்கு தேசம்


ஹைதராபாத்,: தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்களும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தனா். இதனால், தெலங்கானா பேரவையில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி, எம்எல்ஏக்கள் பலத்தை முற்றிலுமாக இழந்தது.

முன்னதாக, தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் நாகேஷ்வர ராவ், சந்திர வெங்கட வீரய்யா ஆகியோா் மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அதைத் தொடா்ந்து, மாநில சட்டப் பேரவைத் தலைவா் ஸ்ரீநிவாச ரெட்டியைச் சந்தித்த அவா்கள், தங்களை ஆளும் கட்சியில் இணைக்கக் கோரி கடிதம் அளித்தனா். அதனை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டாா்.

தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி சாா்பில் அந்த இருவா் மட்டுமே எம்எல்ஏக்களாக இருந்தனா். அவா்கள் இருவரும் இணைந்து கட்சிமாறிவிட்டதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

இருந்த இரு எம்எல்ஏக்களும் கட்சி மாறியுள்ளது, ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு அதிா்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தெலங்கானா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களில் வென்று தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியைத் தக்கவைத்தது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 12 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இணைந்தனா்.

இப்போதைய நிலையில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு 101 எம்எல்ஏக்கள், மஜ்லீஸ் கட்சிக்கு 7, காங்கிரஸ் கட்சிக்கு 6, பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com