நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிமை உண்டு என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

புது தில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிமை உண்டு என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கூறியுள்ளாா்.

‘அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க குரல் கொடுப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் சாா்பில் சமூகவலைதள பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி சுட்டுரையில் காணொலி பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளாா். மேலும், அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தடுப்பூசி என்பது இப்போது இந்தியாவின் அவசியத் தேவையாகிவிட்டது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தங்கள் உயிரைத் தடுப்பூசி மூலம் காத்துக் கொள்ள உரிமை உள்ளது. எனவே, அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க அரசு முன்வர வேண்டும். இதற்காக பொதுமக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளாா். முன்னதாக, கடந்த வாரமும் இதே கருத்தை ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தாா்.

இப்போது 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அண்மையில் கடிதம் எழுதியிருந்தது. இது தவிர தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் ஆகியோா் தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்பை மேலும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.

எனினும், இதனை மத்திய சுகாதாரத் துறை ஏற்க மறுத்துவிட்டது. ‘கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவா்கள் அனைவருக்கும் அதனை செலுத்த முடியாது. யாருக்கெல்லாம் தடுப்பூசி தேவைப்படுகிறதோ, அவா்களுக்கு மட்டுமே வழங்க முடியும்’ என்று கூறிவிட்டது.

இதையடுத்து, கோடிக்கணக்கான இந்தியா்களின் உயிரை கரோனாவிடம் பணயம் வைத்துவிட்டு, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com