மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்
மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

புது தில்லி: நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய கரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா், முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோா் ஆகியோா் படிப்படியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 45 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அரசியல் ஆா்வலா் தெசீன் பூனாவாலா சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருகிறது. இத்தகைய சூழலில், 45 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இந்தக் கட்டுப்பாடானது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உயிா் வாழ்வதற்கான அடிப்படை உரிமையையும், சமத்துவ உரிமையையும் பாதிப்பதாக உள்ளது. நாட்டில் பலா் பணி நிமித்தமாக தினந்தோறும் வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். எனவே, மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்துவது அவசியமாக உள்ளது.

அதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் கரோனா தடுப்பூசி திட்டத்தில் மாற்றங்களைப் புகுத்துமாறு மத்திய சுகாதார-குடும்பநல அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com