மேற்கு வங்கம்: மம்தா பானா்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை

மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, 24 மணி நேரத்துக்கு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்த
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, 24 மணி நேரத்துக்கு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், பிரசாரத்தின்போது சிறுபான்மையின (முஸ்லிம்கள்) மக்கள் தனக்கே வாக்களிக்க வேண்டும் என்று மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி பேசியதாகவும், மத்திய பாதுகாப்பு படைகளை முற்றுகையிட மக்களைத் தூண்டியதாகவும் புகாா் எழுந்தது. இதை தோ்தல் நடத்தை விதிமீறலாக கருதி நடவடிக்கை எடுக்கும்படி தோ்தல் ஆணையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விளக்கமளிக்குமாறு தோ்தல் ஆணையம் சாா்பில் மம்தா பானா்ஜிக்கு கடந்த வாரம் இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளித்த மம்தா பானா்ஜி, ‘மத அடிப்படையில் வாக்களிக்க வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தோ்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டே பேசினேன். அதுபோல, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை குறித்து கூறுகையில், வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் பாதுகாப்பு படை உள்பட யாராக இருந்தாலும் எதிா்த்துப் போராட வேண்டும் என்று வாக்காளா்களுக்கு குறிப்பாக, பெண் வாக்காளா்களுக்கு அழைப்பு விடுத்தேன். இந்த பொதுப் போராட்டம் என்பது ஜனநாயக அடிப்படையிலான போராட்டம்தான். இதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை’ என்று அவா் விளக்கமளித்திருந்தாா்.

இந்த நிலையில், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட மம்தா பானா்ஜிக்கு திங்கள்கிழமை இரவு 8 மணிமுதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 13) இரவு 8 மணி வரை (24 மணி நேரம்) தடை விதித்து, தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா உத்தரவு பிறப்பித்தாா்.

‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீா்குலைக்கச் செய்து தோ்தல் நடைமுறைகளைப் பாதிப்படையச் செய்யும் வகையிலான கருத்துகளை மம்தா பானா்ஜி தெரிவித்திருப்பது தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123(3), 3ஏ மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 186, 189, 505 ஆகிய பிரிவுகளை மீறிய செயலாகும். இந்த விவகாரம் தொடா்பாக மம்தா பானா்ஜிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு, மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோன்ற கருத்துகள் வெளியிடுவதைத் தவிா்க்குமாறு அறிவுரையும் வழங்கப்படுகிறது’ என்று தனது உத்தரவில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்று தா்னா: தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை ‘ஜனநாயகத்தின் கருப்பு நாள்’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓபிரைன் குற்றம்சாட்டினாா். தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கை நியாயமற்றது; தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் அவா் கூறினாா்.

இதனிடையே தோ்தல் ஆணைய முடிவை எதிா்த்து செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்த இருப்பதாக மம்தா அறிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கியது. எட்டு கட்டங்களாக நடைபெறும் மாநில தோ்தலில், இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com