மக்களைப் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி வெற்றிபெறாது: மம்தா பானர்ஜி 

மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்துவதற்காக நிகழ்த்தும் கொடிய விளையாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 
மேற்கு வங்கம், ராணாகாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கம், ராணாகாட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி.


ராணாகாட்: மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்துவதற்காக நிகழ்த்தும் கொடிய விளையாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். 

நாடியா மாவட்டத்தில் உள்ள ராணாகாட் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:  கூச்பிஹார் சம்பவம்போல மேலும் பல சம்பவங்கள் நிகழும் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர். எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? சிதால்குச்சி சம்பவம் தொடர்பாக இதுபோன்ற சிலரது எதிர்வினைகளைக் கண்டு நான் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளேன். இத்தகைய தலைவர்களுக்கு அரசியல் ரீதியாக தடை விதிக்க வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக, பாஜக தங்களது வாகனங்களைச் சேதப்படுத்துவது மட்டுமன்றி சொந்தக் கட்சியினரையும் தலைவர்களையும் பலி கொடுக்கிறது.

பிரதமர் மோடிக்குத் தெரிந்தே கூச்பிஹார் சதித் திட்டத்தை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டுள்ளார். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அச்சம்பவம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் உரிய விசாரணைக்கு உத்தரவிடுவேன். 

மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்துவதற்காக நீங்கள் (பாஜக) நிகழ்த்தும் கொடிய விளையாட்டில் வெற்றி பெற முடியாது. ஏனெனில், இது உத்தர பிரதேசமோ, குஜராத்தோ அல்ல.வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றோர் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டை ஊக்குவிக்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத்தில் உள்ள அகதிகள் காலனிகளில் உள்ளோருக்கு எனது அரசு நில உரிமை வழங்கியுள்ளது. ஆனால், அஸ்ஸôமில் 14 லட்சம் வங்க மக்களை தடுப்பு முகாம்களுக்கு பாஜக அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கும் அதே விதிதான் உங்களுக்குக் காத்திருக்கும்.

நான் வேத மந்திரங்களை அறிந்த பக்தியுள்ள பிராமணப் பெண் என்றாலும், ஜாதி அடையாளங்கள் எனக்கு முக்கியமல்ல. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி என, எந்த சமூகத்திலிருந்தும் என்னைப் பிரிக்க முடியாது. ஜாதி, மதம் என்ற பெயரில் யாரையும் நாங்கள் விலக்கவில்லை. பாஜகவைப்போல் அல்லாமல், அனைவரையும் நாங்கள் மனிதர்களாகவே மதிக்கிறோம்.

பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக எம்.பி. ஒருவர், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தனது காரின் கண்ணாடியைத் தானே சேதப்படுத்தியுள்ளார் என்றார் அவர்.

மேற்கு வங்கப் பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கூச்பிஹார் மாவட்டத்தில் உள்ள சிதால்குச்சி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென வன்முறை நேரிட்டது. அதையடுத்து, மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 

மற்றொரு வாக்குச்சாவடி முன் பாஜக}திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், வாக்களிக்கக் காத்திருந்த ஓர் இளைஞர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com