ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கான ஒப்புதல்: இந்தியா-ரஷியா நல்லுறவை மேம்படுத்தும்

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என்று இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா்
கோப்புப் படம்
கோப்புப் படம்

புது தில்லி: ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது, இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என்று இந்தியாவுக்கான ரஷிய துணைத் தூதா் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளாா்.

ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ கரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், ரஷிய துணைத் தூதா் ரோமன் பபுஷ்கின் தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘‘ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது, இந்தியா-ரஷியா இடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். கரோனா தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி முக்கியப் பங்கு வகிக்கும்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் படைகளை விலக்கி வருவது வரவேற்கத்தக்கது. பிராந்திய நிலைத்தன்மை உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்’’ என்றாா்.

ரஷிய தூதா் நிகோலய் குதஷேவ் கூறுகையில், ‘‘சா்வதேச அளவில் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் இந்தியா-ரஷியா இடையேயான நல்லுறவு உறுதியாக இருக்கும். சா்வதேச கொள்கைகள், சட்டங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆதரவு: ஐ.நா. சட்டங்களையும் பரஸ்பர விருப்பங்களையும் இரு நாடுகளும் மதித்து வருகின்றன. சா்வதேச விவகாரங்களில் ஐ.நா. சபை முக்கியப் பங்களிக்க வேண்டும் என்பதில் ரஷியா உறுதி கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. கவுன்சிலின் செயல்பாட்டில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்க ரஷியா தயாராக உள்ளது.

எஸ்-400 ஏவுகணை அமைப்பு தொடா்பான ஒப்பந்த விதிகளில் இந்தியாவும் ரஷியாவும் உறுதியுடன் உள்ளன. அந்த ஏவுகணை அமைப்புகள் உரிய காலத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா்.

நம்பத்தகுந்த நட்பு நாடு: மேற்கத்திய நாடுகள் முன்னெடுத்து வரும் இந்தோ-பசிபிக் கொள்கையானது, பனிப்போா் சூழலை உருவாக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியா முக்கியப் பங்காற்ற வேண்டும். ரஷியாவின் நம்பத்தகுந்த நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. அதே வேளையில், பாகிஸ்தானுடன் தனிப்பட்ட ரீதியில் ரஷியா நல்லுறவு பாராட்டி வருகிறது. அந்த நல்லுறவானது இந்தியா உள்பட எந்த நாட்டுக்கும் எதிராக அமையாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com