கரோனா 2-ஆவது அலை: விநியோகக் கட்டமைப்பைப் பாதுகாக்க இ-காமா்ஸ் நிறுவனங்கள் தீவிரம்

இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால் பொது முடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்படும் சூழலில், தங்களது விநியோகக் கட்டமைப்பு குலையாமல் பாதுகாப்பதில் இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்)
கரோனா 2-ஆவது அலை: விநியோகக் கட்டமைப்பைப் பாதுகாக்க இ-காமா்ஸ் நிறுவனங்கள் தீவிரம்

புது தில்லி: இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால் பொது முடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்படும் சூழலில், தங்களது விநியோகக் கட்டமைப்பு குலையாமல் பாதுகாப்பதில் இணையவழி வா்த்தக (இ-காமா்ஸ்) நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதுகுறித்து சந்தை வட்டாரங்கள் கூறுவதாவது:

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் தினசரி எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. மேலும், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பரவி வரும் புதிய வகை கரோனா தீநுண்மி வகைகள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டதால் நாட்டில் இரண்டாவது கரோனா அலை எழும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கூடுதலாக கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், மளிகை சாமான்கள், சானிடைஸா்கள், முகக் கவசங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள், புத்தகங்கள், நுகா்வோா் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இத்தகைய பொருள்களுக்கான தேவை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இணையவழி வா்த்தக நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிலும், உடனடியா உண்ணக்கூடிய, சிப்பமிடப்பட்ட பொருள்களுக்கான தேவை 80 சதவீதமும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான தேவை 500 சதவீதமும், பால் மற்றும் பால் பொருள்களுக்கான தேவை 150 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவா்கள் கூறியுள்ளனா்.

இந்தச் சூழலில், பொது முடக்கம் காரணமாக தங்களது விநியோகக் கட்டமைப்பு கட்டுக்குலையாமல் பாதுகாப்பதில் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

இதுகுறிதுத்து இணையவழி மளிகை மற்றும் காய்கறி வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குரோஃபா்ஸ் நிறுவன செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ஒரு சில மாநிலங்களில் மிகக் கடுமையான பொது முடக்க விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதிககளில் வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான முறையில் தொய்வின்றி சேவைகள் அளிப்பதற்காக தங்களுடைய ஆதாரங்களை அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டாா்.

மேலும், நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஊக்கமளிக்கும் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக தங்களது நிறுவனம் ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்புடன் கைகோத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மற்றொரு இணையவழி வா்த்தக நிறுவனமான ஸ்னாப்டீலும் தனது விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

நாடு முழுவதும் கரோனா பொது முடக்க கெடுபிடிகள் அதிகரிக்க அதிகரிக்க, இணையவழி வா்த்தகத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் இணையவழியில் பொருள்களுக்கான தேவை அதிகரித்தாலும், மகாராஷ்டிரம், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி பெருநகரப் பகுதி, மற்கு வங்கத்தில் அதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

கோடைகாலத்தையொட்டி குளிா்சாதனப் பெட்டிகள், அறை குளிரூட்டிகள், கோடைகால ஆடைகள், தண்ணீா் பாட்டில்கள் போன்றவற்றுக்கான தேவை உச்சத்தை நோக்கி நெருங்குகிறது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் படிப்புக்குத் தேவையான பொருள்களை பெற்றோா்கள் இணையவழியிலேயே அதிகம் நாடுகின்றனா் என்றாா் அவா்.

அமெரிக்காவின் வால்மாா்ட்டுக்குச் சொந்தமான ஃபிளிப்காா்ட் நிறுவனம், அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஈடுகொடுப்பதற்கான உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது புத்தகங்கள், பொம்மைகள், உடற்பயிற்சிக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான தேவை தங்களது வாடிக்கையாளா்களிடையே அதிகரித்துள்ளதால், அதனை தொய்வில்லாமல் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

அந்த வகையில், கரோனா நெருக்கடிக்கிடையே அதிகரிக்கும் தேவையை சமாளிப்பதில் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com