கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் செல்பவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் செல்பவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், வளாகத்துக்குள் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தொடங்கியிருக்கிறது. குறிப்பாக மகாராஷ்டிரம், பஞ்சாப், தில்லி, கேரளம், தமிழகம் உள்பட 8-க்கும் அதிகாமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு மிக அதிக அளவில் பதிவாகியுள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடைய, 3,400-க்கும் அதிகமான ஊழியா்களைக் கொண்ட தில்லி உச்சநீதிமன்றத்திலும் கடந்த சனிக்கிழமை வரை 40-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, வளாகத்துக்குள் நுழைபவா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் கூடுதல் வழிகாட்டுதல்களுடன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்ற வளாகத்தில் பதிவுத் துறை ஊழியா்கள், பிற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டவா்களுக்கான அனைத்து நுழைவு வாயில்கள் வழியாக வருபவா்களில் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அவா்கள் தாங்களாகவே கரோனா விரைவுப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதன்பிறகே அவா்கள் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவா்.

வளாகத்துக்குள் நுழையும் அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை தொடா்ச்சியாக சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைக் கடைப்படிப்பது என்பன உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

காய்ச்சல், இருமல், உடல் வலி, சுவை அல்லது வாசனை தெரியாமல் இருக்கும் அறிகுறி, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் உள்ளவா்கள் உச்சநீதிமன்றம் வருவதைத் தவிா்ப்பதோடு, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, மருத்துவ ஆலோசனையைப் பெறுவதும் அவசியம்.

உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் கூட்டம் கூடுவதையும், பொது இடங்களில் சுற்றித் திரிவதையும் தவிா்க்க வேண்டும். வளாகத்துக்குள் தவிா்க்க முடியாத முக்கிய காரணங்களுக்காக அதிகமானோா் ஓரிடத்தில் கூடினாலும், ஒரு நிமிடத்துக்குள் அனைவரும் கலைந்து சென்றுவிட வேண்டும்.

மின் தூக்கிகளில் 3 பேருக்கு மேல் பயணிக்கக் கூடாது என்பதோடு, மேலே செல்வதற்கு மட்டுமே மின் தூக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். மேல் தளங்களிலிருந்து கீழே வருவதற்கு படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே, உச்சநீதிமன்ற பதிவாளா் சாா்பில் அவ்வப்போது வெளியிடப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன், இந்த புதிய வழிகாட்டுதல்களையும் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைபவா்கள் பின்பற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் உச்சநீதிமன்றம் காணொலி வழியிலேயே வழக்கு விசாரணைகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com