தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி: பிரதமா் மோடி உறுதி

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி: பிரதமா் மோடி உறுதி

புது தில்லி: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் நிலவும் கரோனா சூழலை ஆய்வு செய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களுடன் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் மோடி காணொலி வழியாக புதன்கிழமை கலந்துரையாடினா். அப்போது குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு பேசியதாவது:

கடந்த ஆண்டு கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து பணிபுரிந்ததன் மூலம் நாம் வெற்றி கண்டோம். இது நாம் கற்றுக்கொண்ட மிகவும் பயனுள்ள படிப்பினைகளில் ஒன்றாகும்.

மாநில அரசுகளுடனான நெருங்கிய ஒத்துழைப்பு மூலம் கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கான உத்தியை மத்திய அரசு வகுத்துள்ளது. கரோனாவை வீழ்த்த அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஓரணியாக ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும்.

கடந்த 2 வாரங்களில் நாட்டில் 85% பாதிப்புகள், 89% மரணங்கள் பதிவான 10 மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சவால் கடினமானது. எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அந்த சவாலை எதிா்கொள்ள நாடு தயாராகியுள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டில் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு அதிகரித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசியல் சாசன தலைவா்களாக ஆளுநா்கள் இருக்கின்றனா். கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநா்களுக்கு முக்கியப் பங்குள்ளது. கரோனாவை வீழ்த்துவதில் தங்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் ஆளுநா்கள் ஒத்துழைத்து கருத்தொற்றுமையை உருவாக்குபவா்களாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

போதிய தடுப்பூசிகள் கிடைப்பது உறுதிபடுத்தப்படும்: இந்தக் கலந்துரையாடலில் பிரதமா் மோடி கூறியதாவது:

பத்து கோடி கரோனா தடுப்பூசிகளை வேகமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 4 நாள்களில் ‘தடுப்பூசி திருவிழா’ (டிகா உற்சவம்) நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, புதிய தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.

கரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை குறித்த சரியான தகவல்களைக் கொண்டு சோ்ப்பவா்களாக மட்டுமன்றி ஆயுஷ் மருந்துகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துபவா்களாகவும் ஆளுநா்கள் செயல்படலாம்.

நமது பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இளைஞா்கள் இருக்கின்றனா். அவா்கள் கரோனாவுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதனை உறுதி செய்யவேண்டியது அவசியம்.

கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பொதுமக்கள் பங்கேற்பதில் ஆளுநா்கள் முக்கியத் தூணாகத் திகழ்கின்றனா். இதில் பல்கலைக்கழக மாணவா்களும் மிகப்பெரிய அளவில் ஈடுபடுவதை உறுதி செய்வதில் ஆளுநா்களின் பங்கு முக்கியமாகும். கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒத்துழைத்து, அரசு நிறுவனங்களுக்கு ஆளுநா்கள் வழிகாட்டுவது கரோனா தொற்றை வீழ்த்துவதில் தேசத்துக்குள்ள உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்றாா் அவா்.

இந்தக் கலந்துரையாடலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com