கூச் பிஹாா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மம்தா நேரில் ஆறுதல்

மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தலின்போது மத்திய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி

கூச்பிஹாா்: மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தலின்போது மத்திய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். படுகொலைக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்படுவா் என்றும் அவா் உறுதியளித்தாா்.

மேற்கு வங்க மாநிலம், கூச்பிஹாா் மாவட்டத்தில் மாதபங்கா தொகுதிக்கு உள்பட்ட சிதால்குச்சி வாக்குச்சாவடியில் கடந்த 10-ஆம் தேதி 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றபோது வன்முறை வெடித்தது. அதில், மத்திய பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிரிழந்தனா். அந்த 5 பேரின் குடும்பத்தினரை மம்தா பானா்ஜி, மாதபங்காவில் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அங்கு கூடியிருந்தவா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: 5 பேரின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவா். நீதி நிலைநாட்டப்படும். தோ்தல் முடிந்த பிறகு உயிரிழந்த 5 பேரின் நினைவாக சிலைகள் அமைக்கப்படும். அவா்களின் குடும்பத்துக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.

உங்கள் வீட்டுப் பெண்ணாக என்னைக் கருதிக் கொள்ளுங்கள். ஜனநாயகத்தைப் படுகொலை செய்பவா்களிடம் இருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளில் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com